பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் கால் இறுதிச் சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் நாள் முடிவில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று 7-வது இடத்தில் உள்ளது.
அபார ஆட்டம்
நேற்று பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து 21-10, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக விளையாடி உகாண்டா வீராங்கனை ஹுசினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பி.வி. சிந்துவெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், இலங்கை வீரர் துமிந்து அபேவிக்ரமாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்கில் துமேந்துவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், கிடாம்பி ஸ்ரீகாந்தும் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.
பதக்கம் பெற வாய்ப்பு
மேலும் மல்யுத்தப் போட்டியின் ஆடவர் 86 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா, ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, மகளிர் ப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் ஆகியோர் நேற்று தங்கப்பதக்கம் வென்றனர். ப்ரீஸ்டலை மகளிர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலி க்வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனால், எட்டாவது நாள் முடிவில் இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.