மென்டர் பணிக்கு தோனி எந்தக் கட்டணமும் கேட்கவில்லை: சவுரவ் கங்குலி பெருமிதம் | T20 World Cup: MS Dhoni not to charge for India mentor role, says BCCI secretary Jay Shah

0
8


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்எஸ் தோனி அந்தப் பணியை சேவையாகவை செய்யஉள்ளார், அதற்காக அவர் எந்தக் கட்டணமும் வாங்கவில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டி வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. மஸ்கட், அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.

இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்தத் தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாளராக, ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டதையடுத்து, அதற்கு தோனியும் சம்மதித்தார். இதையடுத்து, இந்திய அணியின் ஆலோசகராக தோனி அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியை ஃபைனல் வரை வழிநடத்திச் சென்றுள்ள தோனி, தொடர் முடிந்தபின் இந்திய அணியில் மீண்டும் இணைய உள்ளார்.

தோனியின் ஆலோசகர் பதவி குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “ இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி செயல்பட எந்தவிதமான கட்டணத்தையும் அவர் வாங்கவில்லை. இதை ஒரு சேவையாகவை தோனி செய்கிறார்” எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அளித்த பேட்டியில் “ இந்திய அணிக்கு ஆலோசகராக டி20 உலககக் கோப்பைப் போட்டியில் செயல்படும் தோனி அதற்காக எந்தவிதமான கட்டணத்தையும் கேட்கவில்லை. இதை ஒரு சேவையாகவே தோனி செய்கிறார்.

துபாயில் சமீபத்தில் தோனியைச் சந்தித்தபோதுதான் இந்த கோரி்க்கையை பிசிசிஐ சார்பில் வைத்தோம். அதற்கு தோனியும் அணயின் ஆலோசகராகச் செயல்பட சம்மதித்தார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு மட்டும்தான் ஆலோசகராகச் செயல்பட முடியும் என தோனி என்னிடம் தெரிவித்தார்.

பிசிசிஐ கோரிக்கையை தோனி உடனடியாக ஏற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய அணிக்காக தோனி மீண்டும் பங்களிப்பு செய்யஉள்ளார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி ஊழியர்கள் ஆகியோருடன் இணைந்து இந்திய அணிக்கு தோனி வழிகாட்ட உள்ளார்” எனத் தெரிவித்தார்.