முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக்: எஃப்.பி.ஐ விசாரணை தொடக்கம் | Twitter hack: FBI investigates attack

0
15


அமெரிக்காவின் முக்கியப் பிரபலங்கள் பலரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்தது குறித்து எஃப்.பி.ஐ விசாரணை தொடங்கியுள்ளது.

வியாழக்கிழமை அன்று, எலான் மஸ்க், பில் கேட்ஸ், ஜோ பைடன் உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்கள் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு க்றிப்டோ கரன்ஸி, பிட் காயின் மோசடிப் பதிவுகள் அந்த பக்கங்களில் பகிரப்பட்டன. க்றிப்டோ கரன்ஸியில் நன்கொடை அளிக்க வேண்டியும் பதிவுகள் இடப்பட்டன.

இது குறித்து ட்விட்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் குழு உத்தரவிட்டுள்ளது. நடந்தது ஒருங்கிணைந்த இணைய தாக்குதல் என்று பிரபலங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் உள் கட்டமைப்புக்கு அனுமதி இருக்கும் ஊழியர்களை ஹேக்கர்கள் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ட்விட்டர் கூறியுள்ளது. மேலும் இது போல இனி நடக்காமல் இருக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தங்கள் பக்கத்திலும் விசாரணை தொடர்வதாகக் கூறியுள்ளது.

பிட்காயின் வாலட் குறித்து வரும் ட்வீட்டுகளை இப்போதைக்கு ட்விட்டர் முடக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்தும் குடியரசுக் கட்சியின் தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ட்ரம்ப்பின் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பொதுவாக ட்விட்டரின் பாதுகாப்பு குறித்து தற்போது பல்வேறு அரசியல்வாதிகள் கேள்வியெழுப்பியும், விளக்கம் கோரியும் வருகின்றனர்.