பீஜிங்: தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆவேசத்துடன் ராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
நான்சியின் வருகை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவைச் சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது.
இந்தச் சூழலில் தைவானின் கடற்பரப்புகளில் ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் சீன ராணுவம், தைவான் கடற்பரப்பில் ஏவுகணைகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீனா, தைவானின் கடல் பரப்பில் வீசுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராணுவப் பயிற்சியின் அங்கமாக இவை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் ராணுவ பயிற்சிகளைக் கூர்ந்து கவனித்து வருவதாக தைவான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.