தலிபான்கள் தெளிவான முடிவுக்கு வராவிட்டால் காபூல் விமான நிலையத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல: கத்தார் கைவிரிப்பு | Qatar Won’t Take Responsibility For Kabul Airport Without Clear Taliban Agreement

0
14


தலிபான்கள் தெளிவான முடிவுக்கு வராவிட்டால் காபூல் விமான நிலையத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்கப் படைகளும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியேறிவிட நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க விமானங்கள், ராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தினர். விமான நிலையம் இனி இயக்கப்படுமா? மக்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? சர்வதேச அமைப்புகளின் உதவிகள் ஆப்கன் மக்களுக்குச் சென்று சேருமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

இத்தகைய சூழலில், காபூல் விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறுமளவிற்கு தயாராக்கியது கத்தார்.

ஆப்கனில் உள்ள சில தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உதவியுடன் ஓடுதளம் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணியில் கத்தார் தொழில்நுட்பக் குழுவினர் உதவினர். இந்நிலையில் அங்கு அவ்வப்போது விமானங்களை கத்தார் இயக்கி வருகிறது. கத்தார் விமானம் மூலம் சர்வதேச உதவிகள் ஆப்கனுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தலிபான்கள் தங்களின் ஆட்சி முறை, வெளியுறவுக் கொள்கைகள் என அனைத்திலும் தெளிவான முடிவைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இனியும் எங்களால் பொறுப்பேற்க முடியாது. இப்போதைக்கு தலிபான்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

அங்கு இடைக்கால பிரதமராக ஹசன் அகுந்த்தும், துணைப் பிரதமராக முல்லா பரதாரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய சட்டப்படி தான் ஆட்சி என்று மட்டுமே தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மற்றபடி வேறு வெளியுறவு விவகாரங்கள் பற்றி தெளிவான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. இந்நிலையில் தலிபான்களுக்காக மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் இவ்வாறாக தெரிவித்துள்ளது.