Last Updated : 05 Aug, 2022 06:59 AM
Published : 05 Aug 2022 06:59 AM
Last Updated : 05 Aug 2022 06:59 AM

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய பி அணியில் விளையாடி வரும் 16 வயதான டி.குகேஷ் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் தன்மீது குவியச்செய்துள்ளார். குகேஷின் அற்புதமான செயல் திறனானது 1992-ம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கின் ஆட்டத்தை நினைவூட்டுவதாக இருந்தது.
சர்வதேச அளவில் அறியப்படாத விளாடிமிர் 9-க்கு 8.5 புள்ளிகளை பெற்றார். 2,958 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது போர்டில் விளையாடி தங்கம் வென்றிருந்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான். குகேஷ், கிராம்னிக் ஆகியோரது செயல்திறன்கள் ஒப்பிடத்தக்கவை கிடையாது. ஏனெனில் குகேஷ் ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட கிராண்ட்மாஸ்டர். மேலும் ஒலிம்பியாட் போட்டியில் இன்னும் 5 சுற்றுகள் மீதம் உள்ளன. இருப்பினும் குகேஷின் செயல்திறன் வெகுவாக பாராட்டக்கூடிய அளவிலேயே உள்ளது.
நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டரான அனிஷ் கிரி கூறும்போது, “இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடி வருவது சுவாரஸ்யமாக உள்ளது. குகேஷுக்கு எதிராக இந்தியாவில் விளையாட ஆவலுடன் உள்ளேன். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ரேட்டிங்கில் அவர், உயர்ந்த நிலையை எட்டி வருகிறார். நிலையான இடத்தை பற்றிக்கொண்டு அவர், முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றார்.
கிராண்ட் மாஸ்டர்: 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். அப்போது அவருக்கு 12 வயது 7 மாதம் 17 நாட்கள். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரேட்டிங்: கடந்த 2ம் தேதி இஎல்ஓ ரேட்டிங்கில் 2,719 புள்ளிகள் குவித்து இந்திய செஸ் வீரர்களில் விதித் குஜராத்தியை (2709) பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்தார்.
முன்னேற்றம்: உலக வீரர்கள் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்துள்ளார் குகேஷ்