சின்ன மாற்றம் பெரிய தீர்வு 10: மனம் விட்டு பேசாதே | சின்ன மாற்றம் பெரிய தீர்வு 10: மனம் விட்டு பேசாதே

0
17


Published : 04 Dec 2018 10:58 am

Updated : 04 Dec 2018 10:58 am

 

Published : 04 Dec 2018 10:58 AM
Last Updated : 04 Dec 2018 10:58 AM

10

மனம் விட்டுப் பேசுவது என்பதைப் பலரும் ஒரு தீர்வாகக் கூறுவார்கள். ஆனால், சில சமயம் மனம் விட்டுப் பேசுவதே பிரச்சினைகளுக்கு உரமாகும்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அலுவலகத்தில் தன் மேலதிகாரியால் உண்டாகும் தொல்லைகளைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். அவ்வப்போது சீண்டுவதும் இரட்டை அர்த்தம் கொண்ட வாக்கியங்களைப் பேசுவதுமாக அவன் நடந்துகொள்கிறானாம். எனது ஆலோசனை ஒருபுற​ம் இருக்கட்டும். மேற்படி விவரங்களைப் பகிர்ந்துகொண்ட அந்தப் பெண்மணி கூறிய மற்றொரு விஷயம் முக்கியமானது.

“இந்த வேலை எனக்கு எவ்வளவு முக்கியம்னு என் பாஸுக்குத் தெரியும். அதனால்தான் என்னை சீண்டிகிட்டிருக்கான். நான் வேலையை விட்டுப் போகமாட்டேன்னு அவனுக்குத் தெரியும்”.

“எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவன் என்னிடம் கருணையாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வேலை எனக்கு மிகவும் தேவை என்பதையும், என் சம்பளத்தை நம்பித்தான் என் மொ​த்தக் குடும்பமும் இருக்கிறது என்பதையும் கூறிவிட்டேன்” என்றாள்.

இந்தத் தவறை மற்றவர்கள் செய்யக் கூடாது. ‘நாம் கொஞ்சம் அத்து​மீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போவாள். அல்லது குறைந்தது என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டாள்’ என்ற எண்ணம் அந்த மேலதிகாரியிடம் பதிந்ததும்கூட அவன் அத்துமீறலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நீங்கள் ஒரு ஆட்டோவை அழைக்கிறீர்கள். அது அருகில் வந்தவுடன் உங்கள் நண்பரிடம், “நல்லவேளை இந்த ஆட்டோவாவது கிடைத்ததே. இனிமே ஒரு அடிகூட என்னாலே எடுத்து வைக்க முடியாது. பஸ் ஸ்டாண்டு வேற ​​தூரத்தில் இருக்கு. கடவுள் மாதிரி வந்திருக்கார். நாம ரொம்பவும் அவசரமா போயாகணும்’’ என்றெல்லாம் கூறினால் என்னவாகும்?

​நூறு ​ரூபாய் கேட்க நினைத்த இடத்தில் ​இரு​நூறு ​ரூபாய் என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் கேட்க, நாமே வழிவகுத்ததாகி விடும் அல்லவா?

(மாற்றம் வரும்)