இளமை .நெட்: ஹாஷ்டேக் மூலம் ட்விட்டருக்குப் பாடம்! | இளமை .நெட்: ஹாஷ்டேக் மூலம் ட்விட்டருக்குப் பாடம்!

0
22


குறும்பதிவு சேவையான ட்விட்டர் மாறிக்கொண்டிருக்கிறது எனப் பிரபல இணையதளம் பஸ்ஃபீட் அண்மையில் செய்தி வெளியிட்டது. ட்விட்டர் தனது டைம்லைன் அமைப்பை மாற்றப்போவதாகவும் அந்தச் செய்தி சொன்னது.

இந்தச் செய்தியைப் படித்ததுமே ட்விட்டர் பயனாளிகள் கொந்தளித்துவிட்டனர். அவர்களின் கோபம் குறும்பதிவுகளாகக் கொப்பளித்தது. ட்விட்டர் வழக்கப்படி அவை பொருத்தமான ஹாஷ்டேகால் ஒன்றிணைக்கப்பட்டன. #RIPTwitter என்பதுதான் அந்த ஹாஷ்டேக். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெளியாகும் இந்த ஹாஷ்டேக்கை ட்விட்டருக்கே போட்டது வைரலானது. ட்விட்டர் அபிமானிகளே அதை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?

ட்விட்டர் உத்தேசித்துள்ளதாகக் கூறப்படும் மாற்றத்துக்கு எதிரான வெளிப்பாடுதான் இது. இணைய சேவைகளில் புதிய அம்சங்களும் மாற்றங்களும் இயல்பானவைதான். ஆனால், ட்விட்டரின் சமீபத்திய மாற்றம், அதன் ஆதார தன்மைக்கு எதிராக அமைந்திருப்பதைத்தான் அதன் பயனாளிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ட்விட்டரில் குறும்பதிவு எப்போதும் முதலில் இருக்கும். முந்தைய குறும்பதிவுகள் அவை வெளியான வரிசைப்படி ஒவ்வொன்றாகப் பின் வரிசையில் போகும். இந்தத் தலைகீழ் வரிசைதான் ட்விட்டர் டைம்லைனின் அடையாளம். இதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், இந்த முறையை மாற்றம் செய்து, ஃபேஸ்புக் பாணியில் முன்னுரிமை அடிப்படையில் டைம்லைனைத் தோன்றச்செய்ய ட்விட்டர் திட்டமிட்டிருப்பதாக பஸ்ஃபீட் செய்தி தெரிவித்தது.

140 எழுத்துக்கள் எனும் வரம்புகொண்ட ட்விட்டரின் ஆதார பலமே அதன் உடனடித்தன்மைதான். உடனடியாக இந்த நொடிக்கான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான மேடைதான் ட்விட்டர். அந்த அம்சம் மூலமே அது பிரபலமானது. அதுவே ட்விட்டரில் தொடர்புகொள்ளவும் உரையாடவும் விவாதம் செய்யவும் நட்புகொள்ளவும் வழிசெய்கிறது.

இந்த அம்சத்தில் கை வைக்கலாமா? இப்படிச் செய்தால் ட்விட்டரின் தனித்தன்மை போய்விடாதா? ட்விட்டரைப் புரிந்துகொண்டவர்களும் அந்த சேவையை நேசித்தவர்களும் இந்த உணர்வைக் குறும்பதிவுகளாக்கினர். இந்த மாற்றம் ட்விட்டருக்கு மரண அடியாக இருக்கும் என உணர்த்துவதற்காக #RIPTwitter எனும் ஹாஷ்டேகை அவர்கள் வெளிப்படுத்தினர்.

ஆயிரக்கணக்கில் இந்தக் குறும்பதிவுகள் குவிந்தன. இவற்றில் ஒரு குறும்பதிவில் ஃபேஸ்புக்கின் முகப்புப் பக்க ஒளிப்படம் இடம்பெற்று, அதில் ஃபேஸ்புக் எனும் சொல்லை அடித்துவிட்டு ட்விட்டர் எனும் சொல் எழுதப்பட்டிருந்தது. ஃபேஸ்புக்காக மாற ட்விட்டர் எதற்கு என்பதுபோல் கேட்ட இந்தப் படம் ட்விட்டரில் வைரலாகப் பரவியது.

இந்த எதிர்ப்பால் ட்விட்டர் சி.இ.ஓ. ஜேக் டெர்சி, டைம்லைனை மாற்றும் எண்ணம் இல்லை என மறுப்பு தெரிவிக்க வேண்டிய நிலை வந்தது. இதைக் குறும்பதிவு மூலமே செய்தார். ஒன்றல்ல, இரண்டல்ல வரிசையாக ஆறு குறும்பதிவுகளை வெளியிட்டு தெளிவுபடுத்தினார். உங்களைப்போலவே உடனடி தன்மை குறும்பதிவுகளை நானும் நேசிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இனி, ட்விட்டர் தனது டைம்லைன் தன்மையை மாற்றத் துணியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இத்தகைய வசதியைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பை ட்விட்டர் அறிமுகம் செய்யலாம் என ‘தி வெர்ஜ்’ இணையதளம் தெரிவித்துள்ளது. ஹாஷ்டேக் மூலம் பயனாளிகள் தங்கள் கருத்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகும், இப்படி ஒரு மாற்றத்துக்கு ட்விட்டர் துணியுமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.