அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை டிசம்பர் 11இல் பெறலாம்!

அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை டிசம்பர் 11இல் பெறலாம்!


அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை வரும் டிசம்பர் 11ஆம் திகதிக்குள் பெறமுடியும் என அமெரிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தின் தலைவர் வைத்தியர் மொன்செஃப் ஸ்லவி (Dr Moncef Slaoui) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னரான 24 மணிநேரத்திற்குள் நோய்த் தடுப்புத் தளங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து வருவதுடன் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழத்தின் தரவுகளின்படி, அமெரிக்கா 12 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்களையும் இரண்டு இலட்சத்து 55 ஆயிரம் இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ள அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் நிறுவனம், தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால அங்கீகாரத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை விண்ணப்பித்தது.

குறித்த நிறுவனத்தின் ஒரு மேம்பட்ட சோதனையில் தடுப்பூசியானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களை 94 வீதம் பாதுகாக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாண்டில் 50 மில்லியன் மருந்துகளையும் 2021ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் மருந்துகளையும் உற்பத்தி செய்யவுள்ளதாக ஃபைசர் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கலாமா என்பது குறித்து விவாதிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) தடுப்பூசி ஆலோசனைக் குழு வரும் டிசம்பர் 10ஆம் திகதி கூடவுள்ளது.